Site icon

குழந்தைத் திருமணம்… ஓட்டுப் போடும் வயதில் விதவைப் பட்டம்.. அத்தனையையும் கடந்து சாதித்த முதல் பெண் பொறியாளரின் கதை..!

இன்றைக்கு வீட்டுக்கு வீடு பொறியியல் படித்தவர்கள் இருக்கிறார்கள். ஊருக்கு, ஊர் பொறியியல் கல்லூரிகளும் வந்து விட்டது. ஆனால் 15 வயதிலேயே அதாவது குழந்தைப் பருவத்திலேயே திருமணம் முடிந்து, 18வயதில் கணவனை இழந்து அதன் பின்னரும் தன்னம்பிக்கையுடன் இயங்கி ஜெயித்த பெண்ணின் கதை இது!

லலிதா தான் அந்த சாதனையாளர். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட லலிதாவின் தந்தை பப்பு சுப்பாராவ் கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்பொறியியல் துறை பேராசிரியராக இருந்தார். 1919 ஆகஸ்ட் 27ல் தன் வீட்டில் ஐந்தாவது மகளாக பிறந்தார் லலிதா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு 15 வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது. ஆனாலும் பள்ளிப்படிப்பை நிறுத்தாமல் பத்தாம் வகுப்புவரை படித்தவருக்கு 18 வயதில் குழந்தை பிறந்தது. அந்த பிள்ளைக்கு சியாமளா என பெயர் சூட்டினார் லலிதா.

அதிலிருந்து நான்கே மாதங்களில் லலிதாவின் கணவர் இறந்துபோக, மீண்டும் படிக்கப் போனார் லலிதா. ஆனால் அன்றைய காலத்தில் ஊரும், உறவுகளும் கேலி பேசியது. இந்நிலையில் 1939ம் ஆண்டு ராணிமேரி கல்லூரியில் இண்டர் மீடியேட் பாஸாகினார் லலிதா. ஆனால் அடுத்து என்ன செய்வது? பெரும்குழப்பம் உண்டானது. அன்று கிண்டி பொறியியல் கல்லூரியில் பிரின்சிபாலாக இருந்த கே.சி.சகோவிடம் லலிதாவின் தந்தை சுப்பாராவ் ஆலோசனைக் கேட்டார்.

அப்போது இந்தியா சுதந்திரம் பெறவில்லை. அன்று கல்வித்துறை இயக்குனராக ஆர்.எம்.ஸ்டத்தாமின் என்னும் ஆங்கிலேயன் இருந்தார். அவரது அனுமதி வேண்டி சுப்பாராவ் பயணித்தனர். அன்று பொறியியல் கல்லூரிகளை விரல்விட்டு எண்ணி விடலாம். அதிலும் ஆண்கள் தான் படித்து வந்தனர். கடைசியில் இயக்குநர் அங்கு படிக்க லலிதாவுக்கு அனுமதி கொடுத்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் 1940ல் நுழைந்தார் லலிதா.

அதன் பின்னர் பெண்களும் பொறியியல் சேரலாம் என விளம்பரம் செய்தது கல்லூரி. லீலம்மா, தெரசா என தொடர்ந்து இருபெண்கள் கட்டிட பொறியாளர் படிப்பில் சேர்ந்தனர். 1943ல் படிப்பை முடித்த லலிதா, சிம்லா மத்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் தொடர்ந்து தந்தையுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து 1948ல் அசோசியேட்ஸ் எலக்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்திய அளவில் இன்றும் புகழும் இருக்கு பக்ராநங்கல் அணையின் ஜெனரேட்டர்கள் இவர்கள் வடிவமைத்தது தான்.

இவ்வளவு சாதனைகளையும் நிகழ்த்திய லலிதா, கடந்த 1979 ஆண்டு தன் 60வயதில் இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெற்றார். ‘’என்னை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற ஒரே அக்கறையில் இவ்வளவு உட்சத்துக்கு போன போதும் அம்மா, இன்னொரு திருமணமே செய்து கொள்ளவில்லை.”என நெகிழ்கிறார் அவரது மகள் சியாமளா.

Exit mobile version