Site icon

சோலார் மானியம் உயர்வு: பட்ஜெட்டை தென்னக மக்கள் இயக்கம் வரவேற்பு

தென்னக மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயப்பா கார்த்திக் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தொழில்துறை சார்ந்தும், மாற்று ஆற்றல் சார்ந்தும் தமிழக அரசு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக சோலார் பயன்பாட்டில் அரசின் முன்னெடுப்புகள் பொதுமக்களுக்கு மிகுந்த பலன் தரக்கூடியவை.

விலையில்லா மின்சாரம், தற்போதுள்ள 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என்று முன்னரே தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்துக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.1,545 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், மத்திய அரசின் ‘பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்துடன்’ இணைந்து, மாநில அரசின் புதிய ‘வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தங்கள் வீடுகளில் சோலார் பேனல் அமைப்போருக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு நடுத்தர குடும்பத்தினருக்கு நல்ல பலன் அளிக்கக்கூடியது.

இதேபோல் தாய்மாமன் சீர், அண்ணன் சீர், வெற்றி மடிகணினி திட்டம், விலையில்லா சைக்கிள், காலை உணவுத்திட்டம் உள்ளிட்டவையும் நன்கு பலன் தரும். 125 நாட்கள் ஊரக வேலையை முடித்தோருக்கு கூடுதலாக 25 நாட்கள் பணி வழங்குவதாகச் சொல்லும் தவெக அரசின் பட்ஜெட்டால் கிராமப்புற பொருளாதாரமும் ஏற்றம் பெறும். ஏஐ பயன்பாடு குறித்த வகுப்புகள் தொழில்துறையிலும் பெரியதாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் இந்த பட்ஜெட்டை தென்னக மக்கள் இயக்கம் வரவேற்கிறது.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version