Site icon

ஆதரவற்றோர்களுடன் ஜனநாயகன் திரைப்படம் பார்த்த தவெக நிர்வாகி நாகர்கோவிலில் நெகிழ்ச்சி சம்பவம்

நாகர்கோவிலில் ஜனநாயகன் திரைப்படத்தை தவெக நிர்வாகி ஒருவர் ஆதரவற்றோர்களுடன் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   தன் கடைசிப்படம் என அறிவித்து, விஜய் நடிப்பில் தயாரான திரைப்படம் தான் ஜனநாயகன். இந்தத் திரைப்படம் தணிக்கைத் துறையிடம் சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் வெளியீட்டுத் தேதி தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. இதனிடையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வந்து விஜய் முதல்வரும் ஆகிவிட்டார். விஜயின் கடைசித் திரைப்படம், முதல்வரான பின்பு வெளியாகும் விஜயின் படம் என இந்தத் திரைப்படத்திற்கு கூடுதல் தகுதிகளும் சேர்ந்து கொண்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தவெகவில் பயணிக்கும், நாகர்கோவிலை சேர்ந்த வழக்கறிஞர் மலேஷ், ஜனநாயகன் திரைப்படத்தை ஆதரவற்ற முதியோர்களை தன் சொந்த செலவில் அழைத்துச் சென்று பார்த்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் இருபதுக்கும் அதிகமான முதியோரை ஆட்டோவில் அழைத்துச் சென்று அவர்களை ஜனநாயகன் பார்க்கச் செய்து, மீண்டும் அவர்களது ஆசிரமத்தில் விட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் மலேஷ் கூறுகையில், “சிறுவயதில் இருந்தே நான் எங்கள் தளபதியின் ரசிகர். அரசியல் ரீதியாக அதிமுகவில் பயணித்தேன். அங்கு நெல்லை மண்டல ஐடி விங் இணை செயலாளராக இருந்தேன். தளபதியின் அரசியல் ஆளுமை ஈர்த்ததால் தவெகவில் இணைந்தேன். கடந்த வாரம் நண்பர்கள் சேர்ந்து ஒரு ஆசிரமத்திற்கு யதார்த்தமாக சென்றோம். அப்போது அங்கு இருந்த முதியவர்களும் தளபதியின் ரசிகர்களாக இருந்தார். தளபதியின் பல படங்களையும் அவர்கள் திரையரங்கில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்தார்கள். சர்ப்ரைஸாக 20 பேருக்கும், டிக்கெட் முன்பதிவு செய்து படத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டேன். இது நிறைவான அனுபவமாக இருந்தது.”என்றார்.

Exit mobile version