
திமுகவின் குமரி மேற்கு மாவட்ட முன்னாள் துணை செயலாளரும், மாவட்டப் பிரதிநிதியுமான வழக்கறிஞர் ஜாண் கிறிஸ்டோபர் நிமிர்ந்து நில் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியைஎழுத்து வடிவில் இதில் விரிவாகப் பார்க்கலாம்…
பிழையில்லாத வாக்காளர் பட்டியல் என்பதைத்தானே எஸ்.ஐ,ஆர் சொல்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களிலும் கூட வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுதானே? இப்போது மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்?
அன்றைய காலக்கட்டங்களில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட்டது. இப்போது அப்படி செயல்படுவதாகவா பார்க்கிறீர்கள்? ஒரு விசயத்தை நுட்பமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
தேர்தல் ஆணையர்களை நாட்டின் பிரதமர், நாட்டின் எதிர்கட்சித் தலைவர், அதேபோல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஆகியோர் சேர்ந்து தேர்வுசெய்து வந்தனர். ஆனால் பாஜக ஆட்சியில் அந்த முறையே மாற்றியமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதியை விடுவிடுத்துவிட்டு அந்த இடத்தில் மத்திய அமைச்சரைக் கொண்டு வந்தனர். அப்படியானால் ஆணையர்களைத் தேர்வுசெய்யும் மூவரில் இருவர் ஒன்றிய அரசின் தரப்பு!
தேர்தல் ஆணையத்தை நீதிமன்றமே கேள்வி எழுப்ப முடியாது என சட்டத்தின் பிடியில் இருந்தும் அவர்களுக்கு விலக்கு தருகிறார்கள். இப்படி செயல்பாட்டின் வழியே தேர்தல் ஆணையத்தை தங்களின் கைப்பாவையாக மாற்றியிருக்கிறார்கள். இப்படியானவர்களால் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் பணிகள் மட்டும் எப்படி நியாயமானதாக இருக்கும்? பீகாரில் இதுதொடர்பாக போடப்பட்ட வழக்குகளே முடிவுக்கு வராத நிலையில் 6 மாதங்களில் தேர்தல் வர உள்ள தமிழகத்தில் இதை செயல்படுவத்துவதன் நோக்கம் புரியவில்லையா? திமுக சார்பில் கூட உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோமே…
தேர்தல் ஆணையம் என்பது பிரத்யேகமாக பணியாளர்களைக் கொண்ட அமைப்பு அல்ல. தேர்தல் பணிகளுக்கு தமிழகத்தில் உள்ள அதிகாரிகளைத்தானே பயன்படுத்துவார்கள். பின்பு, எப்படி இதில் முறைகேடு நடக்கும் வாய்ப்பு இருக்கும்?
அந்தப் படிவத்திலேயே ஏராளமான குழப்பங்களும், பிழைகளும் உள்ளன. இன்னொன்றை புரிந்துகொள்ளுங்கள். தேர்தல் கமிஷன் ஒருவரை தனது பணிக்காக எடுத்துக் கொண்டால் அவர் அந்தப் பணி மொத்தமாக முடிந்து அவர் வேறு பணிகளுக்குத் திரும்பும்வரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்.
தேர்தல் ஆணையம் படிவத்தை பூர்த்தி செய்வதிலேயே பல குழப்பங்களை தெளிவற்று சொல்கிறது. அந்த பார்மில் இப்போதைய போட்டோ ஒட்ட வேண்டுமா? இல்லையா என்பதிலேயே ஒருமித்த கருத்து இல்லை. 69 ஆயிரம் பூத்கள் உள்ளது. தமிழகத்தில் 2025 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இத்தனை பேரையும் ஒரே மாத காலத்தில் சரிபார்த்து, முடித்துவிடுவது சாத்தியமா?
மொத்தத்தில் பாஜகவினர் தங்களுக்கு சாதகமற்ற வாக்குகளை நீக்கும் ஆயுதம இதை பயன்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம். அதனால் தான் எதிர்க்கிறோம். ஏன் கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் மம்தாவும் கூட எதிர்க்கிறார்கள். எதிர்கட்சிகளை நசுக்கும் ஆயுதம் தான் இது!
கேள்வி: சமீபகாலமாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அண்ணா பல்கலைக் கழக மாணவி தொடங்கி, கோவை பிருந்தாவன் நகர் பாலியல் வன்கொடுமை வரை பெரும் பட்டியல் நீள்கிறதே?
அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பங்களை வைத்துக்கொண்டு பொதுவில் பேசிவிடக்கூடாது. முந்தைய அதிமுக ஆட்சியோடு ஒப்பிட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் கணிசமான அளவுக்குக் குறைந்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனையும் அனுபவித்து வருகிறார். அதுதான் திராவிட மாடல் அரசின் வேகம். கோவை மாணவி விவகாரத்தில் சம்பவம் நடந்த சில மணிநேரத்திலேயே மூன்று குற்றவாளிகளை போலீஸார் சுட்டுப் பிடித்தார்களே? அது விரைவு இல்லையா?
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மறந்துவிட முடியுமா? 8 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் 4 கோடிபேர் பெண்கள். ஏதோ ஒன்று, இரண்டு சம்பவத்தை முன்வைத்து இப்படி பேசுவது அபத்தம்! பெண்கள் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துவதே திராவிட மாடல் ஆட்சி!
கேள்வி: அதென்ன தனிக்கவனம்? பெண்கள் பாதுகாப்பையே திமுக அரசு கேள்விக்குறியாக்கி விட்டதாகத்தான் எதிர்கட்சிகள் பேசுகின்றன?
எதிர்கட்சிகள் பின்னே பாராட்டுப் பத்திரமா வாசிப்பார்கள்? அவர்கள் அரசியலுக்காக செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கு ரீதியான பாதுகாப்பில் பெண்கள் திருதியுடன் தான் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பெண்களின் சமூகப், பொருளாதார பாதுகாப்பிலும் தலைவர் தளபதியின் அரசு, முனைப்புடன் செயல்படுகிறது.
ஒருகோடியே 20 லட்சம் மகளிர்க்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு அடித்தளம் இடுகிறது. மகளிர் விடியல் பயணம் பணிக்கும், படிக்கவும் செல்லும் பெண்களுக்கு எவ்வளவு பயன் என்பதை ஒவ்வொரு மங்கையரும் உணர்வார்கள். மகளிர்க்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம், திராவிட மாடலின் சாட்சியாக கேரளம், கர்நாடகம் என அண்டை மாநிலங்களுக்கும் பரவியுள்ளது!
மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கல்வியின் மூதல் பெண்கள் ஏற்றம் பெற இப்படி பல திட்டங்களை செய்துவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது குறை சொல்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக பிதற்றுபவர்கள் என்றுதான் பார்க்கிறேன்.
இன்னொன்று சொல்கிறேன். பெண்களுக்கு கர்ப்பப்பை, மார்கப் புற்றுநோய் உள்ளிட்டவற்றை கண்டறியும் வகையில் திராவிட மாடல் அரசு 38 மாவட்டங்களுக்கும், 38 சிறப்பு மருத்துவ வசதி கொண்ட பஸ்களை தருகிறது. தமிழகத்தில் 14 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு கர்ப்பை வாய் தடுப்பூசி திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதெல்லாம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்கள்! வந்த பின் தீர்ப்பதல்ல. வராமல் காப்பத்திலும் முன்னணியில் இருப்பதே திராவிட மாடல்!
விஜய் அரசியல் வருகை திமுகவை பாதிக்குமா?
சார், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கனவு காணும் உரிமையும் இருக்கிறது. ஆனால் மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
சொல்லின் வடிவில் மட்டுமல்ல, செயல்வடிவிலும் தமிழர்களோடு களத்தில் இருக்கிறார் தலைவர் அவர்கள். கரூரில் ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் துயர சம்பவம் நடந்ததும், அன்று இரவே மருத்துவமனைக்கு சென்னையில் இருந்து விரைந்து சென்றவர் முதல்வர். தமிழகத்திற்கு ஒரு பிரச்னை என்றால், அவருக்கு தூக்கம் வர மறுக்கிறது.
தலைவர் என்பவரை திரை மட்டுமே கட்டியமைக்காது. மக்களின் மனத்திரை தான் தீர்மானிக்கும். அங்கே வீரியத்துடன் இருக்கிறது திமுக. மக்களின் இதய சிம்மாசனத்தில் இருக்கிறார் தளபதி!
அதிமுக, பாஜக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரும். திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என தொடர்ந்து எடப்பாடி பேசுகிறாரே?
2024 தேர்தலிலும் தான் பேசினார். கூட்டணிக்கு பல கட்சிகள் வரும் என்றார். அவர் ஒவ்வொருமுறை பேசும்போதும் அதிமுகவினரே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி போய் சேர்ந்ததும் பாஜக கூட்டணியில் இருந்த ஓ.பி.எஸ், டிடிவி தினகரனே வெளியேறிவிட்டனர்.
தேமுதிக அதிமுக கூட்டணியை விட்டு விலகி நிற்கிறது. சகோதிரி, பிரேமலதா அவர்கள் ஜனவரியில் தான் முடிவு என்கிறார். பாஜகவினர் ஒருநாள் தான் தைலாபுரம் தோட்டத்திற்கு கூட்டணி பேச நுழைந்தார்கள். அந்த கட்சியே கலகலத்துப் போய் உள்ளது.
31 ஆண்டுகள் ஆண்ட கட்சியான அதிமுக, விஜயை எதிர்பார்த்து காத்திருந்து அதுவும் நடக்கவில்லை. இதனால் விரக்தியில் போகிற ஊர்களில் எல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார் எடப்பாடி. அதிமுகவால் வேறு யாருடனும் கூட்டணியும் அமைக்க முடியாது. அவர் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையும் இல்லை.
ஆனால் திமுக கூட்டணி பலத்தை மட்டுமே நம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறதே?
சார் கூட்டணி என்பது தேர்தலுக்கானது என்கிற பதத்தைக் கடந்து, மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடம் இல்லை என உறுதியுடன் அமைக்கப்பட்ட கூட்டணி இது.
2019 ஆம் ஆண்டு முதல் இந்தக் கூட்டணி உறுதியுடன் இருக்கிறது. இரு பாராளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இது போகிற போக்கில் அமைந்த கூட்டணி அல்ல. மதவாத சக்திகளை, மகத்தான தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என அமைந்த உறுதியானக் கூட்டணி. தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம் என அமைந்த கூட்டணி.
இது வாக்கை மையப்படுத்தியது அல்ல. தமிழர்களின் உணர்வைக் காக்க, வடக்கே இருந்து வரும் அபயத்தை தடுக்க உணர்வுத்திரளோடு திரண்ட அணி. இதில் யாருக்கு, யார் பலம் என்ற அரசியல் கணக்கிற்கு எல்லாம் இடமே இல்லை!” என்று முடித்தார்.
