தென்குமரி கல்விக்கழக தேர்தல்… புலி பட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் வாக்கு சேகரிப்பில் தீவிரம்

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி, ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வழக்கறிஞர் லயன் ஆர்.ஜெயசீலன், கல்விக் கொடை வள்ளல் பி.டி.செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான அணியை வெற்றிபெறச் செய்வோம்!
செயலாளர் பதவிக்கு போட்டியிடும் பி.டி.செல்வகுமார், நடிகர் விஜயின் நிழலாகவே இருந்து அவரது திரையுலக உச்சத்தின் அங்கமாக இருந்தவர். நடிகர் விஜய் இன்று டாப் ஹீரோவாக இருக்க அடித்தளமும், அச்சாரமும் இட்டவர் பி.டி.செல்வகுமார். நடிகர் விஜயை வைத்து ‘புலி’ என்னும் படத்தையும் தயாரித்தவர்.

ஒரு திரைப்படம் திரைக்கு வருவது என்பது கர்ப்பிணி, குழந்தை பெறுவதற்கு சமமானது. பல முன்னணி நடிகர்களின் படங்கள்கூட சிக்கலில் சிக்கிக் கொள்வதுண்டு. அதுபோன்ற படங்களையும், பிரச்னைகளைத் தீர்த்து ரிலீஸ் செய்து கொடுத்தவர் பி.டி.செல்வகுமார். அவரது ஆளுமைத் திறனுக்கு இதுவே சாட்சி!
இதுமட்டுமா? கலப்பை மக்கள் இயக்கம் என்னும் தன் அமைப்பின் மூலமும் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்பவர். இதுவரை 35 பள்ளிகளுக்கு வகுப்பறை மற்றும் கலையரங்கங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். தன் கல்விச் சேவைக்காகவே, தமிழக அரசின் சிறந்த கல்வி நன்கொடையாளர் விருதும் பெற்றவர். பல கிராமங்களில் சமுதாய நலக்கூடங்களும் கட்டிக்கொடுத்து சேவையே வாழ்வாக வாழ்பவர் பி.டி.செல்வகுமார்.

எங்கள் அணியில் தலைவராக களத்தில் இருக்கும் வழக்கறிஞர் லயன் ஆர்.ஜெயசீலன், உண்ணாமலைக்கடையில் பலமுறை பேரூராட்சித் தலைவராக வென்றவர். அவரது ஆளுமை மற்றும் அனைவரையும் அரவணைத்து செல்லும் தன்மைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அவர் பெற்ற தொடர்ச்சியான வெற்றிகளே சாட்சி!
எங்கள் அணியின் துணைத் தலைவர் அய்யாத்துரை அரசு கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது தனியாக பள்ளியை நிர்வகிக்கும் ஆளுமைமிக்க மனிதர். கல்விப் பின்புலம் கொண்ட அய்யாத்துரை மாணவர் நலனில் அக்கறை கொண்டவர்.

பொருளாளர் பதவிக்கு எங்கள் அணி சார்பில் போட்டியிடும் செந்தி குமார், எஸ்.பி.ஐ வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தாளாளராக இருந்தவர். இதேபோல் எங்கள் அணியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கல்வியையும், சேவையையும் இருகண்களாகக் கொண்டவர்கள்!
எங்கள் குழு வென்றதும் என்னவெல்லாம் செய்ய உள்ளோம்?
பணியாளர்களின் மகிழ்ச்சியே…கல்விச்சாலையின் வளர்ச்சி! அந்த வகையில் நம் கல்விக்கூடத்தில் பணி செய்வோர் மனம் மகிழும்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மாணவர்கள் உடனடி வேலைவாய்ப்பு பெறும்வகையில் புதிய, புதிய பாடத்திட்டங்கள் கல்லூரியில் அறிமுகம் செய்யப்படும்.
எதிர்காலத்தில் நம் தென் குமரி கல்விக் கழகத்தின் சார்பிலேயே செவிலியர் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியவை உருவாக்கப்படும். கல்லூரி மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, புனரமைப்பதுடன் தரமும் உயர்த்தப்படும்.
மாணவர்களின் உடலினை உறுதிசெய்ய விளையாட்டுப் பயிற்சிகள், வேலைவாய்ப்பை உறுதிசெய்ய போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் என மாணவர் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும்.
இதற்கெல்லாம் நிதி ஆதாரம் என நினைப்பது புரிகிறது. கல்லூரி வளர்ச்சிக்கென நட்சத்திர திருவிழா நடத்தி அதன் மூலம் வருவாயைப் பெருக்குவது தொடங்கி பலவிதமான யோசனைகள் உள்ளன.
1984 ஆம் ஆண்டு, நம் சமுதாய மாணவர்களின் கல்வி மேம்பாடு, கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சமூகப் பெரியவர்களால் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரியை, நீங்கள் வாய்ப்பளித்தால் நாங்கள் இன்னும் மேம்படுத்துவோம்.

கர்ம வீரர் காமராஜர், அய்யா தாணுலிங்க நாடார் ஆகியோரை வணங்கிவிட்டு களத்தில் நிற்கிறோம். உங்கள் ஒவ்வொருவரின் விரல் நுனியிலும் இருக்கிறது..நாளைய நம் தலைமுறைகளின் நம்பிக்கை! எனத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெயசீலன், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான அணியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நாளை 15ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் இந்த தேர்தல் பொதுத் தேர்தலுக்கு இணையாக குமரி மாவட்ட மக்கள் மத்தியில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.