உடல் ஆரோக்கியத்தை கூட்டி ஆயுளை பெருக்க இந்த வகை உணவினை சாப்பிடுங்க…
முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டினால்தான் சுகர், பிரஷர் என்ற நோயெல்லாம் எட்டிப் பார்க்கும். ஆனால் இப்போதெல்லாம் வளரிளம் பருவத்திலேயே நோய்களுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
அதேநேரம் உடலினை உறுதி செய்வதற்காக உடல்பயிற்சி செய்வது மட்டும்தான் தீர்வு என இன்றைய தலைமுறையினர் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உடல் பயிற்சியையெல்ல்லாம் ஓவர்டேக் செய்யும்வகையில் ஒரு விசயம் இருக்கிறது. அதுதான் நம் உணவுப்பழக்கம். அதனால் தான் உணவே மருந்து என நம் முன்னோர்கள் சொல்லிவருகின்றனர். அய்யன் வள்ளுவரும் சாப்பிட்ட பின் செரித்ததுக்கு பின்பு வேறு உணவைச் சாப்பிட்டால் நோய் வராது என்கிறார்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும். இப்போது உங்கள் உடலுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள் குறித்த டிப்ஸ் இதோ..
உடல் ஆரோக்கியம், சருமப் பொலிவு பெற கேரட் அல்லது பீட்ரூட்டுடன் தேங்காய்பால் சேர்த்து குடிக்கலாம். ஸ்னேக்ஸ் சாப்பிட விரும்பினால் அவல், தேங்காய், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். இது ருசியாகவும் இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம். இதே காரமாக ஏதாவது சாப்பிட வேண்டுமானால் பிஞ்சு கோவைக்காய், பீர்க்கை, பாகல், சுரைக்காய் போன்ற ஏதாவது ஒருகாயை சிறு, சிறு துண்டுகளாக்கி அதில் இஞ்சி, எலுமிச்சை, இந்துப்பு ஆகியவற்றை சேர்த்து அரைமணிநேரம் ஊறவைத்து ஊறுகாய் போல சாப்பிடலாம்.
இதேபோல் தேனில் இஞ்சி அல்லது நெல்லிக்காயை ஊறப்போட்டு அவ்வப்போது மிட்டாய் போல் சாப்பிடலாம். கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா இவற்றில் ஏதேனும் ஒன்றை எண்ணெயில் வதக்காமல் பச்சையாக துவையல் போல செய்து சாப்பிடலாம். டீ, காபி, பால் ஆகியவற்றுக்குப் பதிலாக பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடிசெய்து டீக்கு பதிலாக குடித்தால் அதே புத்துணர்ச்சி கிடைக்கும். உடற்பயிற்சி ஒரு பக்கம் இருந்தாலும், இதைஎல்லாம் முயற்சித்து பாருங்கள்..