முட்டி மோதும் முக்கியப் புள்ளிகள்: குமரி பாஜகவில் யாருக்கு வாய்ப்பு?

பாஜகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் மாவட்டம் கன்னியாகுமரி. இந்த பாராளுமன்றத் தொகுதியில் ஏற்கனவே இருமுறை பாஜக வென்றுள்ளது. இந்த முறை பாஜகவில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட முக்கியப் புள்ளிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதீஸ் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் ஐயப்பன், வழக்கறிஞர் பால் கனகராஜ், பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் என பலரும் பாஜக சார்பில் போட்டியிட முட்டிமோதுகின்றனர். இதில் தேர்தல் நெருக்கத்தில் மூவர் பெயர் டெல்லி தலைமையின் பரீசிலனைப் பட்டியலில் உள்ளது.

அவர்கள் மூவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக நம்பத்தகுந்த டெல்லி வட்டாரங்களில் இருந்து தகவல் வருகின்றது. இந்தப் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயர் உள்ளது. இவர் இதே தொகுதியில் இதற்குமுன்பு 9 முறை போட்டியிட்ட அனுபவம் கொண்டவர். அதுமட்டும் இல்லாமல் கடைசியாக நடந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அதேநேரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் முந்தைய தேர்தல்களில் மிக எளிதாக இந்தத் தொகுதியில் சீட் பெற்றுவந்தார். ஆனால் இம்முறை அவருக்கு இணையாக மேலும் இருபெயர்கள் தலைமையின் பட்டியலில் உள்ளது.

அதில் தமிழிசை செளந்தர்ராஜன் பெயரும் உள்ளது. தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை, கடந்தத் தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டார். இப்போது ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜன், ஆள்பவர்களும், ஆண்டனும் உத்தரவிட்டால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் எனப் பொடி வைத்துப் பேசிவருகிறார். அவரும் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்.

இந்தப் பட்டியலில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் சதீஸ் ராஜாவின் பெயரும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சதீஸ் ராஜா பாஜகவில் கடந்த 12 ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான மக்கள் சேவைகளைச் செய்து கவனம் குவித்தவர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரின் ஆசியும் அவருக்கு இருக்கிறது. 39வயதே ஆன இளையவரான அவர் பெயரும் இந்த வகையில் ரேஸில் இடம் பெற்றுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் சதீஸ் ராஜா ஆர்.சி, கிறிஸ்தவ நாடார் சமூகத்தையும், அவர் மனைவி இந்து நாடார் சமூகத்தையும் சேர்ந்தவர். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இருசமூக வாக்குகளும் பாஜகவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக தலைமை நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது. இந்த மூவரில் யாருக்கு போட்டியிட சான்ஸ் கிடைக்கும் என்பது சில நாள்களில் தெரிந்துவிடும்.

You may have missed