நேற்று தண்ணீர் லாரி ஓட்டியவர்…இன்று சினிமா இயக்குனர்! கவனம் குவிக்கும் கும்பாரி திரைப்படம் நாளை ரிலீஸ்..

கெவின் ஜோசப் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிப்பில் கும்பாரி திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. அபி சரவணன்(விஐய் விஸ்வா) கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் மஹானா, பருத்திவீரன் சரவணன், ஜான் விஜய், சாம்ஸ், காதல் சுகுமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இயக்குனர் கெவின், சென்னையில் ஆரம்ப காலத்தில் தண்ணீர் லாரி ஓட்டியவர். லாரி டிரைவர் சினிமா இயக்குனர் ஆனத் தருணம் குறித்து கும்பாரி இயக்குனர் கெவின் நம்மிடம் பேசுகையில், “சின்ன வயசுல இருந்தே சினிமா ஆசை அதிகம். நடிப்பு ஆர்வத்தில் தான் சென்னைக்கு வந்தேன். ஆனால் அதற்கும் ஒரு தொழிலும், வருமானமும் அவசியம் என்பதால் எனது சொந்த ஊரான கன்னியாகுமரியில் இருந்தே ஒரு தண்ணீர் லாரியோடு சென்னைக்குச் சென்றேன். தண்ணீர் லாரி ஓட்டிக்கொண்டு தான் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புத் தேடினேன். வீராணம் ஏரித் தண்ணீர் திட்டம் வரும்வரை தண்ணீர் வண்டிதான் ஓட்டினேன். அதன் பின்னர் அந்தத் தொழிலை விட்டுவிட்டேன்.

தொடர்ந்து கால் சென்டர் மூலம் சொந்தமாக வண்டி ஓடியது. அதிலும் டிரைவராக வண்டி ஓட்டுவேன். காலை முதல் மாலைவரை டிரைவராக இருப்பேன். மாலையில் சினிமா வாய்ப்புத் தேடுவேன். தண்ணீர் லாரியை ஸ்டுடியோ முன்பு ஒதுக்கிவிட்டுவிட்டு வாய்ப்புக்கேட்டும், காட்சிகள் படப்பிடிப்பு செய்வதைப் பார்ப்பதற்கும் உள்ளே சென்ற நாள்கள் இப்போதும் நினைவில் உண்டு. இயக்குனர் ஹரிசாரிடம் டிரைவராக வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது சினிமாவை இன்னும் பக்கத்தில் இருந்து பார்த்தேன். அந்த காலங்களே என்னை ஒரு இயக்குனராகச் செதுக்கியது.

கும்பாரி என் இரண்டாவது படம். அது நாளை ரிலீஸ் ஆகின்றது. குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும்வகையில் காமெடி, செண்டிமெண்ட் படமாக இது இருக்கும். யு சான்றிதழ் கிடைத்துள்ளது.”என்றார்.

You may have missed