மனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைகடை தொழிலாளி.. 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்…!

வெளிநாட்டு பயணமெல்லாம் வசதியானவர்களுக்குத் தான் என்பது நம்மில் பலரும் ஆழமாக நம்பிக் கொண்டிருக்கும் விசயம். ஆனால் பொருளாதாரம் அதில் ஒரு விசயமே இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என நிரூபித்து உள்ளார் ஒரு டீக்கடைக்காரர். தன் மனைவியோடு சேர்ந்து இவர் இதுவரை 23 நாடுகளை சுற்றி உள்ளார்.

கேரள மாநிலம், கொச்சினில் தேநீர் கடை வைத்திருக்கிறார் விஜயன். 69 வயதான இவரும், 67 வயதான இவரது மனைவி மோகனாவும் இங்கு டீக்கடை நடத்தி வருகின்றனர். டீக்கடை மட்டுமே இவர்களின் ஒரே வருமானக் கூடம். விஜயன அவரது தந்தை சிறுவயதில் இருந்தே தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சுற்றுலா அழைத்து வர ஒருகட்டத்தில் அதுவே அவருக்கு ஆர்வம் ஆகிப் போனது. தினமும் டீக்கடை வருமானத்தில் ஒரு பகுதியை நாடுகள் சுற்ற ஒதுக்கி விடுகின்றனர். இதுபோக உள்ளூர் வங்கியில் வெளிநாடு செல்ல கடன் வாங்கி பறக்கின்றனர். பின்பு மூன்றே ஆண்டுகளில் டீக்கடை மூலம் சம்பாதித்து அந்த கடனை அடைக்கின்றனர். பின்னர் மீண்டும் அப்படியே கடன் வாங்கி பறக்கின்றனர்.

அர்ஜெண்டினா, பெரு, சுவிட்சர்லாந்து, துபாய் உள்பட 23 நாடுகளை பார்த்துவிட்ட இந்த தம்பதியினர் உணவு, தங்கும் இடம், டிக்கெட்டைத் தவிர பெரிய செலவு எதுவும் செய்வதில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று திரும்புகையில் நினைவாக வாங்கும் பொருளுக்கு கூட பத்து டாலருக்கு மேல் செலவு செய்வதில்லை.

அண்மையில் மகேந்திரா குழு தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த தம்பதியினர் குறித்த வீடீயோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது நெட்டில் செம வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

பக்கத்து ஊருக்கு செல்வதற்கே செலவு கணக்கு பார்ப்பவர்களுக்கு மத்தியில் இந்த டீக்கடைக்காரருக்கு லைக்ஸை தட்டலாம் தானே?